×

ஆதிக்கிற்கு அஜித் படம் கிடைக்க காரணமான நபர் யார் தெரியுமா..?   
 

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விடா முயற்சி' படப்பிடிப்பு ஹைதராபாத் ஷெட்யூலோடு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா, வில்லனாக அர்ஜுன் நடிக்கின்றனர். இவர்கள் தவிர ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில், ரவி ராகவேந்திரா, சஞ்சய், ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சஃபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் என பலரும் நடிக்கின்றனர். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி-யும், ஓ.டி.டியை நெட்ப்ளிக்ஸும் பெற்றுள்ளது.

இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்கிறார்கள். 'விடாமுயற்சி'யின் க்ளைமாக்ஸ் போர்ஷன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் இன்னொரு அரங்கில் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பும் போய்க்கொண்டிருந்தது. 'விடா முயற்சி'யை முடித்தாக வேண்டிய கட்டாயத்தினால் அஜித் இரண்டு படப்பிடிப்புகளிலும் பங்கேற்று அசுரத்தனமாக உழைத்துப் படத்தை முடித்துக் கொடுத்தார். இந்நிலையில் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.

'பஹீரா', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் இப்போது நடித்து வருகிறார். ஆதிக்கிற்கு அஜித் பட வாய்ப்பு அமைய ஒருவகையில் ஹெச்.வினோத் தான் காரணம் என்கின்றனர். காரணம், அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஆதிக்கை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் வினோத்.


அந்தப் படப்பிடிப்பில் அஜித்துடன் அவர் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இது பற்றி ஆதிக்கே தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். ''நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அஜித் சார் என்னிடம் 'நீங்க கண்டிப்பா பெரிய படம் பண்ணுவீங்க.. உயரத்துக்குப் போவீங்க' என மோட்டிவேட் பண்ணுவார். அதன் பிறகே 'மார்க் ஆண்டனி' பண்ணுற வாய்ப்பு அமைந்தது. 'மார்க் ஆண்டனி' ஷூட்டிங் நிறைவடைவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே, அஜித் சார் படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது'' என ஆதிக் சொல்லியிருக்கிறார். 'நேர்கொண்ட பார்வை'யினால் அஜித்தின் நட்பு ஆதிக்கிற்குக் கிடைத்திருக்கிறது. அதன்பின்னரே, அவர் அஜித்தை பாலோ செய்து இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்றும் சொல்கின்றனர்.


'குட் பேட் அக்லி'யில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். 'விடா முயற்சி' படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனதால் த்ரிஷா கொடுத்த பல கால்ஷீட்கள் வீணானது. த்ரிஷாவின் பொறுமைக்குப் பரிசாக தனது அடுத்த படத்திலும் த்ரிஷாவை நடிக்க வைத்துள்ளார் அஜித். அவரைப் பொறுத்தவரையில் படத்தின் நடிகர்கள் தேர்வில் ஒருபோதும் தலையிடுவதில்லை. அது முழுக்க முழுக்க இயக்குநருக்கான சுதந்திரம், இயக்குநர் நினைக்கும் நடிகர்கள் அமைந்தால் தான் கதைக்கு அது வலுச்சேர்க்கும் என்பது அஜித்திற்கு நன்றாகவே தெரியும். அதே சமயம், பல பெரிய படங்களில் நடித்துவரும் த்ரிஷா, அஜர்பைஜானுக்கு கேட்ட சமயமெல்லாம் தன் தேதிகளைக் கொடுத்துள்ளார். தவிர முதலில் பேசப்பட்ட தெலுங்கு ஹீரோயின் ஶ்ரீலீலாவின் கால்ஷீட்கள் கிடைக்காததாலும் த்ரிஷா, 'குட் பேட் அக்லி'க்குள் வந்தார் என்றும் சொல்கிறார்கள். தவிர 'மார்க் ஆண்டனி'யில் நடித்த சுனில் (ஏகாம்பரம் கதாபாத்திரம்) ரெடின் கிங்ஸ்லி எனப் பலரும் நடித்துவருகிறார்கள். அஜித்துடன் ரெடின், சுனில் முதல்முறையாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.