×

‘அவ வந்தாளே... லவ்-அ தந்தாளே...’ ‘டான்’ பட இயக்குநருக்கு டும்..டும்..டும்...!

 

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. லைகா தயாரிப்பில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் 2022ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு  மேல் வசூலித்தது.   இதையடுத்து நீண்ட நாட்களாக சிபி சக்கரவர்த்தி படம் குறித்த அப்டேட்டுகள் வராமல் இருந்து வரும் நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிபி சக்கரவர்த்திக்கு வர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நடத்திய பேச்சுலர் பார்டி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்புகைப்படத்தில் சிவகார்த்திகேயன், சிவாங்கி உள்ளிட்ட பலர் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடியது இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி தனது திருமண புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “புதிய அட்வெஞ்சர் தொடங்கியது. கைகோர்த்தும்... இதயத்திலிருந்து இதயமாகவும்... என்றென்றும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் திருமண நிகழ்வில் சிவகார்த்திகேயன், எஸ்.சூர்யா, அட்லீ உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பங்கேற்று  மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.