தமிழ் படங்களை இந்தியில் டப் செய்யாதீர்கள்... : பவன் கல்யாண் அதிரடி
இந்தி திணிக்கப்படுவதாக கருதினால், தமிழ் படங்களை இந்தியில் டப் செய்யாதீர்கள் என நடிகரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழியை எதிர்க்கிறீர்கள், ஆனால் அதே நேரத்தில் தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மட்டும் ஏன் டப் செய்து வெளியிடுகிறார்கள் என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று நடைபெற்ற விழாவில் அவர் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அனைத்து மொழிகளும் நமது இந்திய கலாச்சாரத்தின் பகுதியே தானே? தமிழ்நாடு தொடர்ந்து ஹிந்தியை எதிர்த்து வருகிறது. அவர்கள் 'இந்தி மொழி தேவையில்லை' என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், எதற்காக தமிழ் படங்களை இந்தியில் டப் செய்கிறார்கள்? எதற்காக பாலிவுட்டில் இருந்து நடிகர்களையும் டெக்னீஷியனர்களையும் தமிழ் படத்தில் பயன்படுத்துகிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.