கங்குவா படத்திற்கு அடுத்தடுத்து கிளம்பும் சிக்கல்.. தீர்வு காணுமா படக்குழு..?
Fuel technologies என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாயை தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உட்பட மூன்று திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ஆறு கோடியே அறுபது லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த fuel technologies international private limited என்ற நிறுவனம் வாங்கியிருந்தது. அதில் தானா சேர்ந்த கூட்டம் தவிர மற்ற இரண்டு படங்கள் தயாரிக்கபடாததால் ஐந்து கோடி ரூபாயை fuel technologies நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதம் உள்ள ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை.
இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயை திருப்பி வழங்காமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி fuel technologies நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இத்தனை ஆண்டுகள் காத்திருந்துவிட்டு, நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.