‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் குறித்து கவுதம் மேனன் ‘ஷாக்’ தகவல்
தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என் படமல்ல என்கிற ரீதியில் இயக்குநர் கவுதம் மேனன் அதிர்ச்சி பதில் ஒன்றை அளித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘Dominic and the Ladies' Purse’ திரைப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அக்கேள்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டார் கவுதம் மேனன்.
“என்ன பெயர் சொன்னீர்கள். எனக்கு அதிலிருந்து ஒரு பாடல் மட்டுமே நினைவு இருக்கிறது. அப்படத்தை நான் பண்ணவில்லை. வேறு யாராவது பண்ணியிருப்பார்கள்” என்று பதிலளித்தார் கவுதம் மேனன். இந்த பதில் இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கிவிட்டது. பலரும் இந்தப் பதிலை பகிர்ந்து இன்னும் தனுஷ் - கவுதம் மேனன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவு பெறவில்லையோ என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தினை ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. இதன் வெளியீட்டு பல்வேறு சிக்கல்கள் ஏற்படவே, இறுதியாக வேல்ஸ் நிறுவனம் தலையிட்டு இப்படத்தினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.