×

“துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாளாகவே இருக்கிறது” - விஜய் ஆண்டனி

 

செந்தூர் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. இப்படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்திருக்க கெளதம் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், தமிழ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து மகிழ்ந்தார்  விஜய் ஆண்டனி. அவருடன் இயக்குநர் தனாவும் பங்கேற்றார்.  

பின்பு விஜய் ஆண்டனி, இயக்குநர் தனா செய்தியாளகர்களை சந்தித்தனர். “முன்பு எல்லாம் ஆடியன்ஸூடன் இணைந்து படம் பார்ப்பதில்லை. ஆனால் சமீபமாக இரண்டு முணு படங்கள் ஆடியன்ஸூடன் சேர்ந்து பார்க்கிறேன். அவர்கள் கொடுக்கும் வரவேற்பு சந்தோஷத்தை தருகிறது. அதோடு இந்தப் படம் எனக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும் என நம்புகிறேன். படத்தில் சொல்லும் மெசேஜ் இயக்குநரின் தனிப்பட்ட விருப்பம். அதை ஒரு ஹீரோவாக மக்களிடம் சொல்வதில் மகிழ்ச்சி. 

விஜய் ஆண்டனி என்று சொன்னால் நம்ம பையன், நம்ம அண்ணன் போன்ற இமேஜ் கிடைத்திருக்கிறது அதற்கு காரணம், பிச்சைக்காரன் படத்தில் அம்மாவுக்காக ஒரு தியாகம் செய்வேன், பிச்சைக்காரன் 2 படத்தில் தங்கச்சிக்காக ஒரு விஷயம் பண்ணியிருப்பேன், கோடியில் ஒருவன் படத்தில் அம்மா எவ்வளவு முக்கியம் என சொல்லியிருப்பேன். இது போன்று நேர்மையாக சில விஷயங்கள் சொன்னதினால்தான் எனக்கு பெண்கள் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்” என்றார்.  இதையடுத்து அவரிடம் படத்தில் துப்பாக்கி காட்சிகள் அதிகம் வருகிறது, இதை இப்போது வெளியிட காரணம், சென்னையில் தொடர்ந்து நடந்து வரும் என்கவுண்டராலா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இப்படத்தை தொடர்ந்து என்னுடைய அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் தாமதமானால் அந்தப் படங்களும் தாமதமாகும். அதனால் இந்தப் படத்தை உடனே ரிலீஸ் செய்திருக்கிறோம். துப்பாக்கி கலாச்சாரம் இப்போது மட்டும் இல்லை, ரொம்ப நாளாகவே இருந்துகொண்டுதான் வருகிறது. நான் காலேஜ் படிக்கும் போது காலேஜ் வாசலிலே ஒரு ரவுடியை சுட்டார்கள். அது தற்காப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. அதைத் தாண்டி விரிவாக அதுகுறித்து எனக்கு தெரியாது” என்றார்.       

பின்பு அவரிடம் ஒரு செய்தியாளர் மக்கள் ஒன்றிணைந்தால் லஞ்சத்தை ஒழிக்கமுடியும் என்ற ரீதியில் படத்தில் சொல்கிறீர்கள், நிஜத்தில் அதை எப்படி மக்கள் கொண்டுபோவார்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “உலகம் முழுவதும் பணத்துக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. பணம் நினைத்தால் எதையும் விலை கொடுத்து வாங்க முடியும். பிச்சைக்காரன் 2 படத்தில் கூட அதை சொல்லியிருப்பேன். பணம் மூலம் நிறைய விஷயங்கள் நடக்கிறது. அதைத் தான் இந்தப் படத்திலும் காட்டியுள்ளேன்” என்றார்.