×

“100-வது படம் சிறப்பாக இருக்கும்” - சுதா கொங்கரா வாழ்த்துக்கு  ஜி.வி.பிரகாஷ் பதில்...!

 

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இரண்டு படங்களுமே வெற்றி அடைந்ததற்கு இயக்குநர் சுதா கொங்கரா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தீபாவளிக்கு தமிழில் ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்களும், தெலுங்கில் ‘லக்கி பாஸ்கர்’, கன்னடத்தில் ‘பஹீரா’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ‘அமரன்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார் ஜி.வி.பிரகாஷ். இரண்டு படங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.இந்த வெற்றிக்கு ஜி.வி.பிரகாஷுக்கு சுதா கொங்கரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் “என் அபிமான இசையமைப்பாளர், என் தம்பி தீபாவளிக்கு ஒன்றல்ல, இரண்டு அற்புதமான ப்ளாக்பஸ்டர் படங்கள் கொடுத்துள்ளார். ‘அமரன்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’. அவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமையாக இருந்தது.

உன்னுடைய 100-வது படத்தின் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சுதா கொங்கரா. அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஜி.வி.பிரகாஷ், “நன்றி. GV100 சிறப்பானதாக இருக்கும். எனது முதல் தேசிய விருது உங்களுடைய படத்தில் கிடைத்தது. அதற்கு எனது நன்றியை 100-வது படத்தில் திரும்ப தருவேன்” என்று தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘புறநானூறு’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது அவருடைய இசையில் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தான் இருவருமே தங்களுடைய பதிவில் தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது நினைவுகூரத்தக்கது.