`உன் படத்தை முடித்து கொடுக்காம சாகமாட்டேன்னு சொன்னார்' - மணிகண்டன் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், அவரது உடலுக்கு இயக்குநர்கள், நடிகர் -நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் டெல்லி கணேஷ் உடனான தங்களின் அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். பிரபல நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (நவ.09) இரவு சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். இரவு 11.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.
அவரது மறைவுக்கு இயக்குநர்கள் லிங்குசாமி, வெற்றிமாறன், நடிகர் மணிகண்டன் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் டெல்லி கணேஷ் உடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் வெற்றிமாறன்: "நான் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் என்னை அரவணைத்து, எனக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்து என்னை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். அப்போது நான் குறும்படம் எடுக்கிறேன் என்று டெல்லி கணேசிடம் சொல்லும் போது, என்னை எந்த கேள்வியும் கேட்காமல் நீ பண்ணு நான் நடிக்கிறேன். நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்வார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரது மறைவு பெரும் இழப்பு" என்றார்.
டெல்லி கணேஷ் குரலில் மிமிக்ரி செய்த நடிகர் மணிகண்டன்: "ஒருமுறை எனக்கு தவறுதலாக அழைப்பு விடுத்த அவர், "அய்யயோ மாற்றி உனக்குப் போட்டுவிட்டேன், சரி போட்டது தான் போட்டேன் ஒரு 10 நிமிடம் என்னுடன் பேசு" என நகைச்சுவை எண்ணம் மாறாமல் பேசினார். என்னுடைய குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதன் பின்னர் உடனடியாக அவருக்கு போன் செய்தேன். அப்போது "கவலைப் படாதே உன்னுடைய படத்தில் நடிக்காமல் சாக மாட்டேன் என சொன்னார்" அவரது வாழ்க்கையிலிருந்து நான் நிறையப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
இயக்குநர் லிங்குசாமி: "என்னுடைய முதல் படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரே ஒரு படம் என்னுடன் வேலை செய்திருந்தாலும் தொடர்ந்து என்னுடன் தொடர்பிலிருந்தார். கமலுடன் நிறையப் படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவரது புத்தக வெளியிட்டு விழாவில் அவரை சந்தித்தேன். அவரது இழப்பு உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
நடிகை தேவயானி: நான் அவரிடம் நிறையப் படங்களில் நடித்துள்ளேன். எப்போது அவரை நான் அப்பாபோல்தான் பார்ப்பேன். நிறையக் கதைகள் சொல்வார். அவரை மிகவும் மிஸ் பண்ணுவேன். வித விதமான கதாபாத்திரங்கள் நடித்து இருக்கிறார். அப்பா எங்கு இருந்தாலும் அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பேசினார்.