இளம் ராப் பாடகர்களை பாராட்டி ஊக்குவித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி...
தமிழ் சினிமாவை உலக சினிமாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் சினிமாவில் இன்னும் அறிமுகமாகவேண்டிய பல்வேறு விஷயங்கள் இருப்பது தெரியவரும். அப்படி, தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் மெல்ல மெல்ல அறிமுகமாகி, தற்போது தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை அடைந்துள்ள ஒரு கலை வடிவம் என்றால், அது சொல்லிசைதான், அதாவது ராப் பாடல்கள். தமிழில் முதன் முதலில் வந்த ராப் பாடல் என்றால் அது, பொல்லாதவன் படத்தில் இடம் பெற்ற எங்கேயும் எப்போதும் பாடல்தான். அதேபோல் இரண்டாவது பாடல், ஆடுகளம் படத்தில் இடம் பெற்ற 'வாழ்க்கை ஒரு போர்க்களம்' பாடல். இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர், யோகி.பி, பாடல்களை எழுதியவர் யுகபாரதி. அதன் பின்னர், தமிழில் நன்கு புகழ் பெற்ற ராப் பாடகராக உருவாகி இன்றைக்கும் கொடிகட்டிப் பறப்பவர், ஹிப் ஹாப் ஆதி. இவர் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமாவில், இன்றைக்கு முக்கிய இடத்தில் இருக்ககூடிய, ராப்பர்களான தெருக்குரல் அறிவு, அசல் கோளாறு மற்றும் பால் டப்பா ஆகியோரைப் பாராட்டினார். நிகழ்ச்சியில் பாராட்டியது மட்டும் இல்லாமல், அவர்கள் மூவர் தொடர்பாகவும், தமிழ் சினிமாவில் ராப் பாடல் ஒரு கட்டத்தில் எப்படி இருந்தது, இன்றைக்கு அது எந்த அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது என மிகவும் கர்வத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஹிப் ஹாப் ஆதியைப் பொறுத்தவரையில், தானே எழுதி பாடிய ராப் பாடல்களை, முதலில் ஆல்பம் பாடல்களாக ரிலீஸ் செய்து, ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், சில சினிமா பாடல்களில் தனது ராப் மெட்டுக்கள் இடம் பெறும் விதமாக பாடல்கள் பாடினார். ஆனால், தான் கதாநாயகனாக அறிமுகமான படமான மீசையை முறுக்கு படத்தில், தனது ஆல்பம் பாடல்களை இடம் பெறச்செய்து, ராப் பாடலை வெகுஜன ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தார். அதன் பின்னர் ராப் பாடல்கள் தமிழ் சினிமாவில் தனி வரவேற்பைப் பெற்றது