×

“மனிதநேய பண்பாளர்...” - ரத்தன் டாடாவுக்கு சூர்யா முதல் பிரியங்கா சோப்ரா வரை புகழஞ்சலி

 

தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த ஒருவர். தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. நவீன இந்தியாவில் அவர் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். நெறிமுறை, ஒருமைப்பாடு, மனிதநேயம், தேச பக்தி தான் அவரிடம் இருந்த உண்மையான செல்வம். 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு நான் அவரை மும்பை தாஜ் ஹோட்டலில் சந்தித்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுத்தினர் மற்றும் சக இந்தியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

 
நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “ரத்தன் டாடாவின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். தொலைநோக்கு பார்வை கொண்ட இரக்கமுள்ள தலைவர், மனிதநேயம் மற்றும் நெறிமுறைகளுக்கான அடையாளமாக திகழ்ந்தவர். அவரின் இழப்பை தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான், “ரத்தன் டாடா மறைவு வருத்தமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

அஜய் தேவ்கன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவரை இழந்த துக்கத்தை உலகமே அனுசரித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ரத்தன் டாடா உத்வேகமாக இருப்பார். இந்தியாவிலும், அதனை கடந்தும் ரத்தன் டாடாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.


மாதவன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு: “தொலைநோக்கு பார்வை கொண்ட, பண்புடையவர், தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்ககூடிய ரத்தன் டாடாவின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது இழப்பை தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ், “பலருக்கும் ஊக்கமளித்து உதவியவர். தேங்க்யூ ரத்தன் டாடா. மிஸ் யூ சார்” என பதிவிட்டுள்ளார்.

ராம் சரண் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நாட்டுக்கு பேரிழப்பு. ரத்தன் டாடா ஒரு லெஜண்ட். சாமானிய மனிதர் முதல் தொழில்துறை முன்னோடிகள் வரை அனைவரின் வாழ்விலும் தாக்கம் செலுத்தியவர்” என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, “உங்கள் கருணையால் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தியுள்ளீர்கள். உங்கள் தலைமைத்துவம், தாராள மனப்பான்மை தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். நாட்டுக்காக நீங்கள் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்புக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.