சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன்..! தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்..!
சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகப் பதிவிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, விஜய் சேதுபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்தன. இது தொடர்பாக ரம்யா மோகன் என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு நன்கு அறிந்த பெண் ஒருவர் தனது ஆசைக்கு இணங்க கேரவனில் வைத்து ரூ.2 லட்சமும், பாலியல் விருப்பங்களுக்காக ரூ.50 ஆயிரமும் விஜய் சேதுபதி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். கோலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு (சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சிக்கியது) மற்றும் கேஸ்டிங் கவுச் என்று சொல்லப்படும் சினிமா வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது வெறும் விளையாட்டல்ல. எனக்கு தெரிந்த நன்கு அறிந்த பெண் ஒருவர் இந்த சூழலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தற்போது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விஜய் சேதுபதி அவருக்கு ரூ.2 லட்சமும், பாலியல் ஆசைக்காக ரூ.50 ஆயிரமும் கொடுத்திருக்கிறார். ஆனால், இன்று நல்லவர் போன்று வேசம் போட்டுள்ளார். இப்படித்தான் அந்தப் பெண்ணைப் போன்று பலரது கதையும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இந்தப் பதிவை போட்டவர் உடனே அதனை நீக்கிவிட்டார். ஆனால், ரம்யா மோகன் அதனை தனது பக்கத்தில் விஜய் சேதுபதி இவ்வாறு செய்திருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார். மேலும், இது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த உடனே ரம்யா மோகனை பலரும் விமர்சிக்க தொடங்கினர்.
“என்னைத் தூரத்திலிருந்து தெரிந்தவர்கள் கூட இதைக் கேட்டுச் சிரிப்பார்கள். எனக்கும் என்னைத் தெரியும். இதுபோன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் வருத்தமடைந்தனர். ஆனால் நான் அவர்களிடம், ‘விடுங்கள். இந்தப் பெண் வெளிச்சம் பெறுவதற்காகவே இதைச் செய்கிறார். அவருக்குக் கிடைத்த சில நிமிடப் புகழை அவர் அனுபவிக்கட்டும்’,” என்று விஜய் சேதுபதி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாங்கள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளோம். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் அனைத்து வகையான கிசுகிசுப் பிரச்சாரங்களையும் எதிர்கொண்டுள்ளேன். இதுபோன்ற இலக்கு வைத்த தாக்குதல்கள் இதுவரை என்னை பாதிக்கவில்லை. இனியும் பாதிக்காது,” என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பதில், அவருக்கு ஆதரவாகப் பலரையும் பேச வைத்துள்ளது. திரைத்துறையில் பிரபலங்கள் மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுப்பப்படும் நிலையில், விஜய் சேதுபதியின் இந்தத் தெளிவான நிலைப்பாடு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சைபர் கிரைமில் புகார் அளித்திருப்பது, சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக அவர் தயாராக இருப்பதையும் காட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் வதந்திகளா அல்லது உண்மைக்குப் புறம்பானவையா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.