×

எப்போதும் உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பேன்... சினிமாவில் 30 ஆண்டுகள் நிறைவு குறித்து அஜித்!

 

நடிகர் அஜித் திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து தற்போது ரசிகர்களுக்கு சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் கோலிவுட்டின் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவருக்கு தமிழகம் முழுவதும் இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். 1990-ம் ஆண்டு வெளியான 'என் வீடு என் கணவர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அஜித் 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆசை திரைப்படம் அவருக்கு கதாநாயகன் என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

அதையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், வில்லன், பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என சூப்பர் ஹிட் படங்கள் பலவற்றை கொடுத்துள்ளார். பல தோல்விகளைச் சந்தித்து இருந்தாலும் விடாமுயற்சியுடன் மீண்டு வந்து தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களின் பேவரைட் நடிகராக முன்னேறி உள்ளார். தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அஜித் திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


"ரசிகர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மூவரும் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். நான் ரசிகர்களிடமிருந்து வரும் அன்பு, வெறுப்பாளர்களிடமிருந்து வரும் வெறுப்புகள் மற்றும் சீரான முறையில் வரும் நடுநிலையாளர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். வாழு வாழ விடு. எப்போதும் உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.