×

 ‘பராசக்தி’ படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டியது..  இந்த காரணத்தால் மிஸ்ஸாகிடுச்சு - லோகேஷ் கனகராஜ்  

 

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நான் வில்லனாக  நடித்திருக்க வேண்டியது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  

 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், அமீர்கான், ராகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பெரும் நட்சத்திர பட்டாளமே  இணைந்து நடித்துள்ள  ‘கூலி’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் பல்வேறு நேர்க்காணல்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்தவகையில் நேர்க்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ்,  “ என்னுடைய நேர்க்காணல்களை பார்த்துவிட்டு , இந்தக் காதாப்பத்திரம் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என சிலர் என்னை அணுகினார்கள். அப்படித்தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகும் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க முதலில் என்னை தான் அணுகினார்கள். சுதா மேடமை சந்தித்தபோது இதுகுறித்து பேசினோம். கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  சிவகார்த்திகேயனும் நீங்கள் நடித்தால் நன்றாக  இருக்கும் என்று சொன்னார். ஆனால் கூலி படத்தின் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் அதை செய்யவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.  

சுதாகொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அவரது 25வது படம் ‘பராசக்தி’. படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய கதாப்பாத்திரத்தில் ராணா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல்  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,  லோகேஷ் கனகராஜ் விரைவில் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.