×

“இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்” - மகளுக்கு பதிலளித்து நடிகர் பாலா உருக்கம்
 

 

தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, அஜித்தின் ‘வீரம்’, ரஜினியின் ‘அண்ணாத்த’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பாலா. இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர், பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். கருத்துவேறுபாடு காரணமாகப் பாலாவும் அம்ருதாவும் விவாகரத்து பெற்றனர். கடந்த 2021-ம்ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார், பாலா.

இந்நிலையில் பாலாவின் மகள் அவந்திகா வெளியிட்ட வீடியோவில், “என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாகவும், எனக்கு அதிக பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறி வருகிறார். அது உண்மை இல்லை. என் தந்தையை நேசிக்க எனக்கு சின்ன காரணம் கூட இல்லை. அவர் என்னையும் என் அம்மாவையும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்தததுதான் கண்முன் வருகிறது. அந்த நேரத்தில் குழந்தை என்பதால் அம்மாவுக்கு என்னால் உதவ முடியவில்லை. என் மீது உண்மையிலேயே பாசமிருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கீடாதீர்கள்” என்று கூறியிருந்தார்.
 
இதற்குப் பதிலளித்து பாலா வெளியிட்டுள்ள வீடியோவில், “ மகளே, என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்கு வாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவன் மகளுடன் வாக்குவாதம் செய்தால் அவன் மனிதனே இல்லை. உனக்கு 3 வயதாக இருக்கும்போது நான் பாட்டிலை வீச முயன்றதாகவும் ஐந்து நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறியிருக்கிறாய். உன்னுடன் வாக்குவாதம் செய்தால் வெல்லலாம். நீ வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உன்னிடம் சரணடைகிறேன். இனி நான் உன் வாழ்க்கையில் வரமாட்டேன். நன்றாகப் படித்து வலிமையானவளாக வளர வாழ்த்துகள் மகளே” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.