×

சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி 

 

''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' என 'வேவ்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

மும்பையில் 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் ரஜினி, ஹேமமாலினி, மோகன்லால், சிரஞ்சீவி, அக்ஷய்குமார், மிதுன் சக்ரவர்த்தி, ஷாரூக்கான், அமீர்கான், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே, ஆல்யா பட், ராஜமவுலி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது. சினிமாவும், இசையும் உலகை இணைக்கிறது. திரைப்பட தயாரிப்பு, கேமிங், இசை உள்ளிட்டவற்றில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது. வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.

இந்தியாவின் உணவு உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் இசையும் உலகம் முழுவதும் பிரபலமடையும் என்பது எனக்கு தெரியும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மும்பையில் நடந்த மாநாட்டில், இந்திய சினிமாவின் 5 பிரபலங்களின் நினைவு அஞ்சல் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார். குரு தத், பி.பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், சலீல் சவுத்ரி ஆகிய 5 பேரின் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.