×

“டாப் ரேட்டிங்கில் இந்த படம் இடம்பெறும்” - இந்திய கிரிக்கெட் வீரர் உறுதி
 

 

அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கடேஷ் இணைத்து தயாரித்துள்ளார். 

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை ‘டம்மா கோலி...’, ‘ஆச ஒரவே...’, ‘சில்லாஞ்சிருக்கியே...’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

null


இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இப்போதுதான் லப்பர் பந்து படத்தை பார்த்தேன், சிறப்பாக இருந்தது. லோக்கல் கிரிக்கெட் விளையாடுவதை சிறப்பாக படமெடுத்துள்ளனர். என்னுடைய ஆரம்ப காலங்களில் நானும் லப்பர் பந்தில் விளையாடியதால் இப்படத்தில் வரும் எல்லா காட்சிகளிலும் என்னை தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்தது. படம் அருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் இந்த படம் டாப் ரேட்டிங்கில் வரும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.