“சாதி நாம் சந்திக்காத மனிதர்களை வெறுக்க வைப்பது உண்மைதான்” - அஜித்குமார்
கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். பின்பு விடாமுயற்சி படம் தொடங்குவதற்கு முன் தனது பைக்கில் உலக சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அதில் முதற்கட்ட பயணத்தை முடித்த அவர் அடுத்தகட்ட பயணத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதையடுத்து விரைவில் நடக்கவிருக்கும் யுரோப்பியன் ரேஸிங்கில் அஜித் பங்கேற்கவுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். மேலும் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற புதிய அணியை அஜித் உருவாக்கி அதன் சார்பில் ஐரோப்பியா சீரிஸ் பந்தயத்தில் ஒருவரை களமிறக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே வீனஸ் மோட்டர் சைக்கிள்ஸ் டூர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார் அஜித். அந்நிறுவனம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயனாளிகளுடன் பைக் ட்ராவல் செய்திருந்தார். இந்த தனது பயண அனுபவத்தை பற்றி அஜித் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அஜித், “பயணம் என்பது சிறந்த கல்விகளில் ஒன்று. 'மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு. அது உண்மைதான். ஒருவரை நாம் சந்திப்பதற்கு முன்பே அவர்களை மதிப்பீடு செய்கிறோம். ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது வெவ்வேறு தேசம், மதம், கலாச்சாரம் கொண்ட மனிதர்களை சந்திப்பீர்கள். அவர்களுடன் பச்சாதாபம் கொள்ளத் தொடங்குவீர்கள். அதோடு சுற்றியுள்ளவர்களிடமும் அதிக பச்சாதாபம் காட்டுவீர்கள். அது உங்களை சிறந்த நபராக மாற்றும்” எனப் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.