‘ஜெய் பீம்’ படத்திற்கு எப்படி விருது தருவார்கள் ?... நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி !
சூர்யா நடிப்பில் தா.ச ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது. ஜெய் பீம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றது.
இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘ஜெய் பீம்’ படத்திற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நானி, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர் சுசீந்திரன், நடிகர் அசோக் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். #Justasking என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.