சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக 'ஜெயிலர் 2' ப்ரோமோ ?
’ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ப்ரோமோ ஷூட் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இத்திரைப்படம் உலக அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் காவாலா, ஹுகும் ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டானது. ஜெயிலர் படத்தில் ரஜினி ஸ்டைலுடன், நெல்சனின் காமெடியும் சேர்த்து மாஸ் கமர்ஷியலாக அமைந்ததால் சினிமா ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.
’கூலி’ படத்தின் மிரட்டலான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
அந்த ப்ரோமோ ஷூட் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கி 50 ஆண்டுகள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜெயிலர் 2 அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக ஜெயிலர் திரைப்படம் அறிவிக்கப்பட்ட போது வெளியான ப்ரோமோ வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.