சிறிய காகமும், பெரிய கழுகும்.. ரஜினி சொன்ன குட்டிக்கதை !
‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த சொன்ன குட்டிக்கதை இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினி, குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதில் ஒரு காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்துக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால் கழுகு எப்போதும் அமைதியாக இருந்துக் கொண்டிருக்கும். கழுகு உயரமாக பறக்கும் போது காகமும் உயரமாக பறக்க நினைக்கும். ஆனால் காகத்தால் அது முடியாது. அப்போது கழுகு தன் இறக்கையை கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துக்கொண்டே இருக்கும். இந்த குட்டிக் கதையை யாரை மனதில் வைத்துக் கொண்டு ரஜினி சொன்னார் என்று சமூக வலைத்தளத்தில் விவாதமே நடைபெற்று வருகிறது.
மேலும் பேசிய அவர், என்னிடம் குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திரந்தால் எங்கேயோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயது செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் குடிப்பதால் அம்மா, மனைவி உள்ளிட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். குரைக்காத நாயும், குறை சொல்லாத வாயும் இல்லை. நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.