‘பிளாக்’ படத்துக்கு வரவேற்பு: ஜீவா நெகிழ்ச்சி
‘பிளாக்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் ஜீவா நெகிழ்ச்சியடைந்துள்ளார். கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தினை சுப்பையா வெளியிட்டார். முதலில் குறைவான காட்சிகளே வெளியான இந்தப் படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.இதன் மூலம் திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் 2 காட்சிகள் திரையிடப்பட்ட ‘பிளாக்’, இப்போது 4 காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இதற்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு நடத்தியது.
அந்த நிகழ்வுக்குப் பிறகு பத்திரிகையாளர் மத்தியில் ஜீவா பேசும் போது, “ரொம்ப நாள் கழித்து ஒரு படத்தின் நன்றி அறிவிப்புக்கு வந்திருக்கிறேன். ‘பிளாக்’ படத்தின் வெற்றிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இன்னும் வெற்றியடையும் படங்களை பண்ணவேண்டும் என்று நினைக்கிறேன். அது தான் ஊக்குவிக்கும் விஷயம். ‘டிஷ்யூம்’ படத்தில் ‘கைத்தட்டலுக்கு ஏங்குற ஜாதி’ என்று ஒரு வசனம் பேசியிருப்பேன். அது போல் தான் அனைவருமே பாராட்டுக்கு தான் நிறைய விஷயங்கள் செய்கிறோம். இன்னும் நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது.’பிளாக்’ ஒரு மாஸ் திரைப்படமோ, காமெடி படமோ அல்ல. அடுத்து என்ன என்பது ரசிகர்களை யோசிக்கவைக்கும் படமாக இது இருந்தது. அப்படித்தான் எனக்குமே இருந்தது. ஏனென்றால் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காட்சிகள் படமாக்குவோம். நானே படமாக பார்க்கும் போது தான் தெரிந்தது. மக்களுடன் பார்க்கும் போது எனக்கே புதிதாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.