மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா கமல்ஹாசன்?
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், அடுத்த சீசனை மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 -ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளரானார்.
பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கத் தொடங்கினார். எனினும் வார இறுதி நாள்களில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதத்திற்காகவே அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தனர். எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாகவும் இயல்பாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் பாணி பலரைக் கவர்ந்துள்ளது. கமல்ஹாசனின் பாணியிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்றாலும், போட்டியாளர்களிடம் பேசி, அவர்களின் மனநிலையை வெளிப்படுத்த வைப்பதில் கமல் ஹாசன் கைதேர்ந்தவர் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேலு கூறி இருக்கிறார். கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் பற்றி படிக்க சென்றதன் காரணமாகவே அவரால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கமல்ஹாசனால் கலந்துகொள்ள முடியவில்லை, அடுத்த சீசன் முதல் மீண்டும் அவர் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.