×

‘கங்குவா’ எனக்காக தயார் செய்த கதையாக இருக்கலாம்: ரஜினி  
 

 

 “நான் சிவாவிடம், ‘எனக்காக நீங்கள் ஒரு பீரியட் படம் பண்ணுங்கள்’ என்றேன். அவரும் சரி என சொன்னார். அப்படிப் பார்த்தால் ‘கங்குவா’ எனக்காக தயார் செய்த கதையாக இருக்கலாம் என நினைக்கிறேன். இப்படி படம் இயக்கும் சிவா எனக்காகவும் ஒரு கதையை உருவாக்குவார் என நம்புகிறேன்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்கவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படத்தை வாழ்த்தி விழா அரங்கில் ரஜினி பேசிய காணொலி ஒளிப்பரப்பப்பட்டது. அதில் பேசிய ரஜினி, “ஞானவேல் ராஜாவை ‘பருத்தி வீரன்’ சமயத்தில் இருந்து எனக்கு தெரியும். வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்பதே அவரின் ஆசை. அதை ‘பருத்தி வீரன்’ படத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம். ‘கங்குவா’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியுமா என்று அவர் என்னிடம் கேட்டார். படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால் தான் இந்த வீடியோ. சிறுத்தை சிவாவுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் பணியாற்றினேன். 20 - 30 படங்கள் பணியாற்றியது போல ஒரு நெருக்கம் எங்களுக்குள் ஏற்பட்டது. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை திரையுலகில் பார்க்கவே முடியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

‘அண்ணாத்த’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் எடுத்தோம். அந்த சமயத்தில் நான் சிவாவிடம், ‘எனக்காக நீங்கள் ஒரு பீரியட் படம் பண்ணுங்கள்’ என்றேன். அவரும் சரி என சொன்னார். அப்படிப் பார்த்தால் ‘கங்குவா’ எனக்காக தயார் செய்த கதையாக இருக்கலாம் என நினைக்கிறேன். இயக்குநர் சிவா எனக்காகவும் ஒரு கதையை உருவாக்குவார் என நம்புகிறேன். சூர்யாவின் ஒழுக்கம், கண்ணியம், நேர்மை, அறிவு எல்லோருக்கும் தெரிந்தது. அவரைப்போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யாவை பொறுத்தவரை வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அப்படி அவருக்கு ‘கங்குவா’ அமைந்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.