ரசிகர்களால் இணையத்தில் சர்ச்சை - ‘கங்குவா’ படக்குழு அதிர்ச்சி
‘கங்குவா’ வெளியீடு குறித்து ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்த கருத்துகளால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் முதலில் அக்டோபர் 10-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அன்றைய தினத்தில் ‘வேட்டையன்’ படமும் வெளியாவதால் ‘கங்குவா’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனை ‘மெய்யழகன்’ விழாவில் சூர்யா உறுதிப்படுத்தினார்.
இது குறித்து ரசிகர்கள் இணையத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். பலரும் படத்தினை ஓடிடியில் வெளியிடுங்கள் என்று கருத்துகள் தெரிவித்தார்கள். மேலும் ,சிலர் சரியான திட்டமிடல் இல்லை எனவும் குறிப்பிட்டார்கள். இந்த கருத்துகள் அனைத்தையும் ஞானவேல்ராஜா, நேகா ஞானவேல்ராஜா மற்றும் தனஞ்ஜெயன் ஆகியோரை குறிப்பிட்டு தெரிவித்தார்கள்.
இந்த கருத்துகளுக்கு நேகா ஞானவேல்ராஜா பதிலடி கொடுத்து வந்தார். அதற்கு பலரும் எதிர் கருத்துகள் தெரிவிக்கவே, இணையத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இறுதியாக தனஞ்ஜெயன் “‘கங்குவா’ வெளியீடு குறித்து பல்வேறு கருத்துகள், கிண்டல்கள் பார்க்க முடிகிறது. உங்களுடைய கருத்துகள் புரிகிறது அதற்கு நேகா ஞானவேல்ராஜா சரியான முறையில் பதிலளித்து வருகிறார்.
அனைத்து மொழிகளிலும் 5 நாட்கள் விடுமுறை என்பதால் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என்பது அற்புதமான தேதி. ஆனால், இப்போது அக்டோபர் அல்லது நவம்பரில் சரியான தேதியை தேர்வு செய்து ஞானவேல்ராஜா எங்களுக்கு தெரிவிப்பார். அதுவரை பொறுமை காத்து தயாரிப்பாளரின் முடிவுக்கு மதிப்பளிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.