×

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகும் பிரபல கன்னட நடிகை..?

 

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம்‘தேவரா’. இந்த படம் ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படமாகும். இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த செப்.27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார். இப்படம், ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


இப்படத்தில், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது. ருக்மணி வசந்த் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ படத்திலும், சிவகார்த்திகேயன் – ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.