×

ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்காட்சி... விளக்கமளித்துள்ள இயக்குனர் ! 

 

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதா குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். மு.மாறனின் வழக்கமான பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்தின் சிறப்புக்காட்சி நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அதில் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததை கிண்டல் செய்யும் விதமாக காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் மு.மாறனிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், அந்த காட்சி குறித்து எல்லாருக்கும் தெரியும். படத்தில் இடம்பெற்ற காட்சியை காமெடியாக தான் பார்க்கிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை என்றாலும், அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. படத்தில் அந்த காட்சி சிறிய காமெடியாக இடம்பெற்றிருக்கும். அதை சீரிஸாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி பிரச்சனை என்றால் கண்டிப்பாக சென்சார் போர்டு அனுமதி தந்திருக்க மாட்டார்கள். எந்த ஆட்சியிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்திருப்போம். நாங்கள் நேர்மையான கதையை படமாக எடுத்துள்ளோம் என்று கூறினார்.