×

விபத்தில் சிக்கிய காந்தாரா 2 படக்குழு : படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு

 

ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது. 

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம்  ‘கந்தாரா தி லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் இதில் பணியாற்றுகின்றனர். கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பணியாற்றி வரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் அடிப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய காவல் துறை, “ஜட்கலில் உள்ள மூதூரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கொல்லூர் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 20 கலைஞர்கள் விபத்துக்குள்ளான மினி பேருந்தில் இருந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர். இந்த விபத்தால் படப்பிடிப்பு சில தினங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.