×

விரைவில் தொடங்கும் கார்த்தி - நலன் குமாரசாமி படம்... புதிய அப்டேட் !

 

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்  நலன் குமாரசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்‌. தமிழில் வெளியான முதல் டார்க் காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய 'காதலும் கடந்து போகும்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் புதிய படம் ஒன்றை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார்‌. இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. 

பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு தனது 25வது படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். 'ஜப்பான்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை 'குக்கூ' படத்தை இயக்கிய ராஜூ முருகன் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை முடித்துவிட்டு நலன் குமாரசாமி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ‌