பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நிறைவு செய்ததை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ள கார்த்தி!
'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பில் தனது பகுதியை நிறைவு செய்துவிட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக உருவாகி வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படம் 500 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் கார்த்தி வந்தியதேவன் ஆகவும், ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் ஆகவும், திரிஷா குந்திதேவி ஆகவும், ஐஸ்வர்யாராய் நந்தினி தேவி மற்றும் மந்தாகினி என்ற இரு கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் விக்ரம் இருவரும் இரு பாகங்களுக்குமான தங்களது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கார்த்தியும் தனது பகுதியை நிறைவு செய்திருப்பதாக புதுமையான முறையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்" இளவரசி(த்ரிஷா) நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச(ஜெயம் ரவி) என் பணியும் முடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.