×

‘கங்குவா’ படத்தில் கார்த்தி? - சூர்யா கொடுத்த ‘ஹிண்ட்’

 

‘கங்குவா’ படத்தில் கார்த்தி நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பை விளம்பர நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நேற்று (அக்.24) ஹைதராபாத்தில் விளம்பர பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. ‘கங்குவா’ பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவிடம் “கங்குவா படத்தில் கார்த்தி நடித்துள்ளாரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவரிடம் சில விநாடிகள் பேசினார்.


பிறகு சூர்யா, “திரையரங்கில் கிடைக்கும் ஆச்சரியத்தை ஏன் கெடுக்க வேண்டும். பார்க்கலாம். கார்த்தி மற்றும் இதர நடிகர்கள் என சிலர் திரையில் வரலாம். திரையரங்க அனுபவத்துக்காக காத்திருங்கள்” என்று பதிலளித்துள்ளார். இந்தப் பதிலின் மூலம் ‘கங்குவா’ படத்தில் கார்த்தி நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. கார்த்தி மட்டுமன்றி பாடலொன்றில் அனிருத்தும் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.