×

"லோகேஷ் மாதிரியே பிரேம்குமாரும் என்னைய வச்சு செஞ்சுட்டாரு" - நடிகர் கார்த்தி கலகல பேச்சு

 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எப்படி என்னை வெச்சு செய்தாரோ, அதேமாதிரி தான் பிரேம்குமாரும் இரவு முழுவதும் துங்கவிடாமல் என்னை வைத்து படம் எடுத்தார் என 'மெய்யழகன்' இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி தெரிவித்தார்.
 கோவை கொடிசியா அரங்கத்தில் 'மெய்யழகன்' (Meiyazhagan) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், "மெய்யழகனை முதலில் சிறுகதையாகத் தான் செய்தோம். பின்னர் படமாகச் செய்ய சொல்லியவர் விஜய் சேதுபதி தான். இந்த கதையை யாரும் பண்ண முன்வருவார்கள் என நம்பவில்லை. ஆனால் கார்த்தி படித்துிட்டு ஓகே சொல்லியது மிகவும் மகிழ்ச்சி. அரவிந்த்சாமி சார் படம் பண்ணலாம் என்று சொல்லிய பின்புதான் படத்திற்கு முழு உருவம் கிடைத்தது.

நீங்கள் கேட்கும் இசையை நாங்கள் பெரிய ஸ்டுடியோவில் பண்ணவில்லை. கொட்டும் மழையில் ஒரு வீட்டின் ஓரத்தில் தான் உருவாக்கினோம். இது குடும்ப உறவுகள் பற்றிய படம். நான் கொஞ்சம் சோம்பேறி, இனி எழுதுவதை வேகப்படுத்த வேண்டும். 'அன்பு' பற்றி படம் எடுத்துள்ளேன். 96 படத்திலும் அன்பு தான் சொல்லியிருந்தேன். 96 படத்தை விட இதில் அன்பு அதிகம் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், "கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்குத் தான் வருவோம். எங்கள் அப்பச்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும். பொற்காலம் என்றால் லீவில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான். ஊரில் இருக்கும் 10 நாளும் அருமையாக இருக்கும். 8 பேருக்கு விறகு வைத்து சமைத்துப் பரிமாறுவார்கள்.

குடும்பத்தினர் உறவு தான் மெய்யழகன் படம். 96 படத்தில் காதலிப்பவர்களை பிரேம்குமார் கதறவிட்டார், காதல் பண்ணாதவர்களை ஏங்கவிட்டார். பிரேம் குமாரின் வசனங்கள் அருமையாக உள்ளது. மெல்லிய உணர்வுகள் தரும் படம் பண்ண நான் ஏங்கிய காலம் உள்ளது. குடும்பத்தின் உறவுகளும், வேர்களும் குறித்து இந்த படம் பேசும். ஃபோன் இருந்தால் போதும் யார் கூடவும் பேச வேண்டாம் என்று ஆகிவிட்டது. ஆனால் அப்படி கிடையாது. அப்படி இருக்கக்கூடாது. பிரேம் குமார் என்ற இயக்குநரை வெளியே கொண்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி நன்றி சொல்ல வேண்டும்.

'காதலே காதலே'.. என்ற ரிங்டோன் எல்லா பக்கமும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. சிங்கத்திடம் கொடுத்தால் படம் நன்றாக வரும் என்பதால், படத்தை அண்ணாவிடம் கொடுத்துவிட்டேன். ஜல்லிக்கட்டு படப்பிடிப்பு எனக்கு புதுமையாக இருந்தது. உடம்பில் கருப்பசாமி வந்துவிட்டார் என்ற வசனம் எல்லாம் உடம்பு சிலிர்க்க வைக்கிறது. ஒரே வாரத்தில் இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் இரவெல்லாம் தூங்கவிடாமல் எப்படி வேலை வாங்கினாரோ, அதே மாதிரி தான் பிரேம்குமாரும் இரவு முழுவதும் துங்கவிடாமல் படம் எடுத்தார்" என்று கார்த்தி பேசினார்.