கோலிவுட்டில் மீண்டும் பக்தி Mode : அம்மன் கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகள்!..
தமிழ் சினிமா வரலாற்றில் பத்தி படங்களுக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. சினிமா துவங்கிய காலம் முதலே கடவுள் தொடர்பான படங்கள் அதிகம் வந்தது. சரித்திர கதைகளுக்கு பின் பக்தி படங்கள் அதிகம் வந்தது. அதன்பின் சமூக படங்கள் அதிகம் வர துவங்கியதும் பக்தி படங்கள் குறைந்து போனது. ஆனால், திருவிளையாடல் போன்ற பக்தி படங்களில் சிவாஜி நடித்ததால் மீண்டும் தமிழ் சினிமாவில் பக்தி படங்கள் தலை தூக்கியது. பல முன்னணி நடிகர்களும் பக்தி படங்களில் நடித்தார்கள். ஆதிபராசக்தி படத்தில் கே.ஆர்.விஜயா நடித்து படம் சூப்பர் ஹிட் ஆனதும் அம்மன் படங்கள் வர துவங்கியது.எனவே, பல கதாநாயகிகளும் அம்மன் படங்களில் நடிக்க துவங்கினார்கள். ரம்யா கிருஷ்ணன் நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த அம்மன் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் அம்மனுக்கு கிராபிக்ஸ் எல்லாம் செய்யப்பட்டது.அதன்பின் மீனா, ரோஜா போன்ற நடிகைகள் அம்மனாக நடித்தார்கள்.
கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, இப்போது மீண்டும் அம்மன் படங்கள் கோலிவுட்டின் பார்வை திரும்பியிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி மாசாணி அம்மன் என்கிற பெயரில் ஒரு அம்மன் படத்தை எடுக்கவிருக்கிறார். இதில், நடிகை திரிஷா அம்மனாக நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மனாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
அதேபோல், அருந்ததி, பாகுபலி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகிய அனுஷ்காவும் இப்போது மீண்டும் ஒரு தமிழ் சினிமாவில் அம்மனாக நடிக்கவிருக்கிறாராம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மொத்தத்தில் கோலிவுட்டில் மீண்டும் பக்தி சீரியஸ் துவங்கி இருக்கிறது.