×

“வாழ்க்கை மிகவும் குறுகியது” - விபத்தில் சிக்கியது குறித்து ராஷ்மிகா

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழில் தனுஷுன் குபேரா படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்திலும், இந்தியில் சல்மான் கானின் சிக்கந்தர் படத்திலும் நடித்து வருகிறார். நடிப்புக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தோன்றி ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா கடைசியாக கேரளாவில் நடைபெற்ற ஒரு கடை திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன் பிறகு எந்த ஒரு நிகழ்விலும் கலந்துகொள்ளாத ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதளத்திலும் கூட தோன்றவில்லை. இதனால், அவர் குறித்து அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இந்த நிலையில்  ராஷ்மிகா மந்தனா, தனக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “சில நாட்களாகவே சமூக வலைதளத்திலும், பொது நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ளவில்லை. கடந்த மாதத்தில் நான் ஆக்டிவ்வாக இல்லாததற்கு காரணம் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து குணமாகி, மருத்துவர்கள் பரிந்துரைகளின்படி தற்போது ஓய்வெடுத்து வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “எப்போதும் உங்களை கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். ஏனென்றால் வாழ்க்கை மிகவும் குறுகியது மற்றும் எளிதில் உடையக்கூடியது. நாளை என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது. அதனால் ஒவ்வொரு நாளும் சந்தோஷத்தை தேர்ந்தெடுங்கள்” என்று அறிவுரை கூறியுள்ளார்.