×

 ‘லியோ’ ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு கிடைத்த விமர்சனம்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்

 

‘லியோ’ படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு கிடைத்த விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். 2023-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வெளியானது. மாபெரும் வரவேற்பினைப் பெற்றாலும், அதன் ப்ளாஷ்பேக் காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. நரபலி கொடுப்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.
தற்போது ‘லியோ’ படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனம் குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

 
அதில் அவர் கூறியிருப்பதாவது: ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் இந்தக் கதைக்குள் வர வேண்டும். அந்த 20 நிமிடத்துக்குள் விஜய் அண்ணாவுக்கு ஒரு பாடலும் வேண்டும். ஏனென்றால் அது படத்தை விற்பனை செய்வதற்கு தேவைப்பட்டது. முதலில் ‘Game of Thrones’-ல் உள்ள Red Wedding மாதிரி ஒரு பகுதி பண்ணலாம் என முடிவு செய்தேன். என்ன நடந்தது என்பதே தெரியாமல் இந்தக் கதைக்குள் வந்துவிட வேண்டும் என்று தான் யோசித்தோம்.அதைச் செய்தால் பாடல், சண்டைக் காட்சிகள், கதாபாத்திர அறிமுகம் எதுவுமே கொடுக்க இயலாது. என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது நரபலி கொடுக்கும் பழக்கம் இன்னுமே புழக்கத்தில் இருப்பதாக சொன்னார்கள். நரபலி பற்றி நிறைய படித்த போது அதை எல்லாம் கமர்ஷியல் படத்தில் நேரடியாக சொல்லமுடியாது. ஆனால் ரொம்ப மூடநம்பிக்கையை சொன்ன மாதிரி ஆகிவிட்டது. 20 வருடங்கள் பின்னோக்கி போனதாக சொன்னார்கள். அதை ஏற்றுக் கொண்டேன்.


20 நிமிடக் காட்சியினை எழுதுவதற்கு நேரம் தான் தேவை. ’கைதி’ மாதிரி ப்ளாஷ்பேக் காட்சியே இல்லாமல் செய்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. நிறைய விஷயங்கள் அந்த 20 நிமிடத்துக்குள் பண்ண வேண்டும் என்பதால் வந்த விஷயம் தான். சில விஷயங்கள் நாம் நினைத்த மாதிரியே மக்களிடம் போய் சேரும் என்பது இல்லை. அந்த 20 நிமிடக் காட்சிக்கு நான் இன்னும் நிறைய உழைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.