ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுத்தது... 'மாமனிதன்' படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!
விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணியின் 'மாமனிதன்' படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் 'மாமனிதன்' திரைப்படம் உருவாகியுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை என இவர்கள் கூட்டணியில் வெளியான மூன்று படங்களும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றன. மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணைந்து இசையமைத்து வரும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
"ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுத்துள்ளது மாமனிதன். இயக்குனர் சீனு ராமசாமி தனது மனதையும் ஆன்மாவையும் வைத்து, இதை ஒரு யதார்த்தமான கிளாசிக் படமாக உருவாக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. மேஸ்ட்ரோ இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துடன் ஆத்மார்த்தமாக இணைந்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.