×

திட்டமிட்டபடி வெளியாகும் ‘மாமன்னன்’... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றனம் !

 

 உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

உதயநிதியின்  ‘மாமன்னன்’ திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் தாக்கல் தாக்கல் செய்த அந்த மனுவில், தனது நிறுவனம் சார்பில் உதயநிதி நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை கடந்த 2018-ஆம் தொடங்கினோம். கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் கயல் ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்தனர். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் 20 சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளது. ஆனால் அதற்குள் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேநேரம் ‘மாமன்னன்’ திரைப்படம் தான் கடைசிப்படம் என்று அறிவித்துவிட்டார். ‘ஏஞ்சல்’ படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன். ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்’ படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதனால் ஏஞ்சல் படத்திற்கான போடப்பட்ட ஒப்பந்தின்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். அதனால் உடனடியாக ‘ஏஞ்சல்’ படப்பிடிப்பை முடித்து தரவேண்டும் அல்லது 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்த வழக்கு கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உதயநிதி மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிட்டெட் கூட்டு நிறுவனம் மூலம் ‘மாமன்னன்’ படம் தயாரிக்கப்பட்டது. ஏஞ்சல் படம் வாய்மொழி ஒப்பந்தமாக ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திடம் போடப்பட்டுள்ளது என்று உதயநிதி தரப்பில் வாதிட்டது. 

தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உதயநிதி இல்லை என்று கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ‘மாமன்னன்’ படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்ற அதிரடி தீர்ப்பை கொடுத்தார். இதனால் ‘மாமன்னன்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தெரிகிறது.