×

மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு வேறு எந்த குறியீடும் தேவையில்லை - ராஜ்குமார் பெரியசாமி பளீச் !

 

ஒரு ராணுவ வீரனை நினைவு கூற எடுத்த திரைப்படம் இது, இதில் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அமரன் படத்தின் இயக்கநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.
  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்பட வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அமரன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், “மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு உண்மையான உழைப்பிற்கும், ஒரு தரமான படத்திற்கும் தமிழ் மக்கள் என்றுமே ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

அமரன் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட திரைப்படம். சினிமாவில் இது ஒரு ஜானர். அந்த வகையில், இந்த திரைப்படம் மக்களைச் சென்றடைந்து வெற்றி தந்துள்ளது. ஒரு கண்டெண்ட் ஓரியண்டட் திரைப்படம் இப்படி ஒரு வெற்றி பெற்றது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அடுத்தடுத்து புது முயற்சிகளை முன்னெடுக்கத் தோன்றுகிறது.

ஒரு கதாநாயகன் கதைக்கு சம்மதம் சொல்லும் போதுதான், ஒரு கதை திரைப்படமாக உருவெடுக்க உயிர் பெறுகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தை ஒப்புக்கொண்டு நடித்ததற்கு மனமார்ந்த நன்றி.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது. ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது டீமுக்கும் எனது நன்றி. அமீர்கான் ஒரு திரைப்படத்திற்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளாமல் படம் வெற்றியான பிறகு அந்தப் படத்திலிருந்து ஒரு பங்கை பெற்றுக் கொள்ளுவார், அதேபோல் அர்ப்பணிப்புள்ள நடிகை சாய் பல்லவி.

இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, முகுந்த் வரதராஜனின் மனைவி எனக்கு ஒரு கோரிக்கை வைத்தார். முகுந்த் தன்னை ஒரு தமிழன் என்று பெருமை கொள்வார். இந்தத் திரைப்படத்தில் முகுந்த் ஒரு தமிழனாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதேபோல், முகுந்த் வரதராஜன் அவரது தாய், தந்தையர் முகுந்த் வரதராஜன் தன்னை ஒரு இந்தியனாக மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்ள நினைத்தார் என கூறினார்கள். ஒரு ராணுவ வீரனை நினைவு கூற எடுத்த திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்காக அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அசோக சக்ரா விருது பெற்ற, அவர் ஆற்றிய அந்த சிறப்பான பணிக்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் விதமாக அமரன் திரைப்படம் இருக்கும்" என்றார்.