×

கடும் வெயிலில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு: 5 மருத்துவர்களை சந்தித்த மாளவிகா மோகனன்

 


விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ஆக. 15-ல் வெளியாகும் இந்தப் படம் பற்றி மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில், இதன் படப்பிடிப்பு முடிந்ததும் 5 மருத்துவர்களைச் சந்தித்தாக கூறியுள்ளார்.இது பற்றி அவர் மேலும் கூறும்போது, “இந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்துக்கான மேக்கப்புக்கு மட்டும் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் டாட்டூ மேக்கப், விக், காஸ்டியூம் என இதற்கே கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். நான் கண்களில் கான்டாக்ட் லென்ஸ் போட்டு நடித்தேன். இதனால் என் கண்களில் பிரச்சினை ஏற்பட்டது. அதேபோல் மேக்கப்பினால் தோல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது.

கோலார் தங்க வயலில் நடந்த படப்பிடிப்புக்குப் பிறகு கண் மற்றும் தோல் நோய் மருத்துவர் என குறைந்தபட்சம் 5 மருத்துவர்களைச் சந்தித்தேன். கடும் வெயிலில் நடித்தேன்.அப்போது குடையை பயன்படுத்தவில்லை. அதுபற்றிய எண்ணமே வரவில்லை. அறைக்கு வந்த பிறகுதான், வெயிலால் ஏற்பட்ட பிரச்சினைகள் தெரியவந்தது. ஒரு முறை இயக்குநர் எருமை சவாரி காட்சி இருக்கிறது என்றார். விளையாட்டுக்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். நிஜமாகவே எருமை மாட்டின் மீது ஏறி அமர வேண்டும் என்றதும் அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.