×

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி - மோகன்லால்

 

16 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2008-ம் வெளியான ‘Twenty:20’ மலையாள படத்தில் மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். திலீப் தயாரித்த இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தனித்தனியே தங்களுக்கென பாதைகளை அமைத்து படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில 16 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கிட்டதட்ட உறுதி செய்யும் வகையில் அண்மையில் குஞ்சாக்கோ போபன் அளித்த பேட்டியில், “மலையாளத்தில் திரையுலகம் இதுவரை காணாத வகையில் ஒரு படம் உருவாக இருக்கிறது. அது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார். மேலும் ப்ளாஷ் பேக் காட்சி ஒன்றுக்காக டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.