சூரியின் மாறுபட்ட நடிப்பில் மண்டாடி -பட விமர்சனம்
முகவைப்பட்டினத்தில், பாய்மர படகு போட்டியில் புறக்கணிக்கப்பட்ட முகவை மைந்தன்ஸ் அணி கேப்டன் மிதுன் ஜெய்சங்கர், எதிரணியான சுனாமி ரைடர்ஸ் கேப்டனை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அவரை கொல்ல சுஹாஸ் தனது ஆட்களை அனுப்புகிறார். தப்பித்துச் செல்லும் மிதுன் ஜெய்சங்கர், சென்னையில் நீச்சல் குளத்தில் பணியாற்றும் முகவைப்பட்டினம் சூரியிடம் அடைக்கலமாகிறார். சில காரணங்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு வந்த சூரி, மனதில் ஒரு சபதத்துடன் மிதுன் ஜெய்சங்கருடன் ஊருக்கு திரும்புகிறார்.
அதன் பிறகு நடப்பது மீதி கதை. முகவை மைந்தன்ஸ் அணிக்காக மனம் தளராமல் உயிரை பணயம் வைத்து போராடும் குணத்துடன், முற்றிலும் மாறுபட்ட சூரியின் நடிப்புக்கு விருதுகள் கொடுக்கலாம். படகு போட்டியிலும், சத்யராஜுடனான சிஷ்ய விசுவாசத்திலும், மஹிமா நம்பியாருடனான காதலிலும் அழுத்தமான தடத்தை பதிக்கிறார் சூரி, மஹிமா நம்பியாரின் காலில் விழுந்து கதறும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
டெரர் முகம் காட்டி அட்டகாசமாக நடித்துள்ள சுஹாஸ், தமிழுக்கு புதிய நல்வரவு. மஹிமா நம்பியாரா இது என ஆச்சரியப்பட வைக்கிறது அவரது தோற்றமும், எமோஷ்னலான நடிப்பும் சிறப்பு. சத்யராஜின் கெட்டப் புதிது. அவரும் தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். பல படங்களில் பார்த்த பத்மன், இதில் முக்கியமான வேடத்தில் படம் முழுக்க வந்து நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படத்துக்கு பிறகு அவர் முக்கிய இடத்தை பிடிப்பார்.