×

மாரி செல்வராஜின் ‘வாழை’ - ஓ.டி.டி. அப்டேட் வெளியீடு

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியாகி தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் வாழை. இப்படத்தை இயக்கியதை தாண்டி மாரி செல்வராஜே தயாரிக்கவும் செய்திருந்தார். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது வாழை தார் ஏற்றி செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பேசு பொருளானது. மேலும் முன்னணி திரை பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக மாரி செல்வராஜ் சமீபத்தில் நடந்த படத்தின் வெற்றி விழாவில் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்பட இந்தி, தெலுங்கு, மலையாளம் என 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.