கின்னஸ் உலக சாதனை படைத்தார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி...!
திரைப்படங்களில் அதிக நடன அசைவுகளை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனையாளர்கள் விருது இன்று வழங்கப்பட்டது. இதனை அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகஸ்ட் 1955ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார். அவரது தந்தை, கொனிடேலா வெங்கட ராவ், ஒரு கான்ஸ்டபிள் ஆவார். படிப்பின் மீது ஈடுபாடு கொண்ட இவர், பட்டப்படிப்பை முடித்து விட்டு, சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இதையடுத்து, 1978 ஆம் ஆண்டு புனாதிரல்லு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இருப்பினும் இவர் வாழ்க்கையை மாற்றிய படம் என்றால் அது சிந்தூரம் படம் தான். நடிகர் சிரஞ்சீவி: நான்கு தசாப்தங்களுக்கு மேலான தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் கன்னடம் என 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ருத்ர வீணை, இந்திரா, தாகூர், சுயம் க்ருஷி, சைரா நரசிம்ம ரெட்டி, ஸ்டாலின் மற்றும் கேங் லீடர், ஷங்கர் தாதா என அனைத்துப்படங்களும் மிகப்பெரிய வசூலை பெற்றன.
இவர், நந்தி விருதுகள், ரகுபதி வெங்கையா விருது, ஒன்பது பிலிம்பேர் விருதுகள், பத்ம பூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். கின்னஸ் உலக சாதனை: தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்தி பல விருதுகளை வென்றுள்ள இவருக்கு மற்றுமொரு கௌரவம் கிடைத்துள்ளது. அதாவது, 45 ஆண்டுகளில் தனது 156 படங்களில் 537 பாடல்களில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். இதனை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
பாராட்டிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமீர் கான், உங்களை போல நானும் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகன் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் என்னிடம் கேட்ட போது, நான் எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள். ஆர்டர் போடுங்க சார் என்று சொன்னேன். சிரஞ்சீவி சார் ஆடிய எந்த பாடலைப் பார்த்தாலும் அதில் அவர் மகிழ்ச்சியாக ஆடி இருப்பார். என்ன கஷ்டமான ஸ்டேப்பாக இருந்தாலும் அசால்டாக ஆடி இருப்பார். அவர் ஆடுவதை பார்த்துவிட்டால், அடுத்து அதில் இருந்து நமது பார்வை மாற்ற முடியாது. அது தான் சிரஞ்சீவியின் தனித்துவமான திறமை என்றார்.