‘மெய்யழகன்’; தோழா படத்தை குறிப்பிட்டு நாகர்ஜூனா நெகிழ்ச்சி
96 பட இயக்குநர் ச.பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியான நிலையில் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற தலைப்பில் கடந்த 28ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாரி செல்வராஜ் லிங்குசாமி, விஷ்ணு விஷால், அல்போன்ஸ் புத்ரன், பாண்டிராஜ் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரான நாகர்ஜூனா இப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சகோதரர் கார்த்தி, நீங்கள் நடித்த சத்யம் சுந்தரம் படத்தை நேற்று இரவு பார்த்தேன். நீங்களும் அர்விந்த் சுவாமியும் நன்றாக நடித்திருந்தீர்கள். நீங்கள் வரும் காட்சி எல்லாம் புன்னகையோடு பார்த்து ரசித்தேன். பின்பு அதே புன்னகையோடு தூங்க சென்றேன். சிறுவயது நினைவுகளை நினைவூட்டியது. அதோடு ஊபிரி பட நினைவுகளும் வந்தது. மெய்யழகன் படத்தை மக்களும் விமர்சகர்களும் மனதாரப் பாராட்டுவதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கார்த்தி, நாகர்ஜூனா பாராட்டுக்கு, “நல்ல சினிமாக்களை நீங்கள் பாராட்டுவது எங்களை சிறந்து விளங்க தூண்டுகுறது” என தனது எக்ஸ் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட அப்படம் தோழா என்ற தலைப்பில் தமிழிலும் ஊபிரி என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியானது. 2016ஆம் ஆண்டு வெளியான இப்படம் இரு மொழிகளிலுமே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.