கதவு திறந்தது மெல்லவா??.. கேலி செய்த சென்சார் குழு அதிகாரி - ருசிகர தகவலை பகிர்ந்த ஏவிஎம்..
நடிகர் மோகன் நடித்த மெல்ல திறந்தது கதவு திரைப்படம் ரிலீஸான போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் ‘மெல்ல திறந்தது கதவு’.இதில் ஹீரோவாக மைக் மோகனும், ஹீரோயின்களாக ராதா, அமலா நடித்திருந்தனர். அத்துடன் விசு, செந்தில், கமலா காமேஷ், சார்லீ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்தனர். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘வா வெண்ணிலா’, ‘குழல் ஊதும் கண்ணனுக்கு’, ‘தில் தில் தில் மனதில்’, ‘தேடும் கண் பார்வை’, ‘ஊரு சனம் தூங்கிடுச்சு’ போன்ற பாடல்கள் இன்றளவும் எவர்க்ரீன் நினைவுகளாக இருந்து வருகின்றன.
இந்தப் படத்தில் முதலில் ஹீரோ மோகன் , அமலாவைக் காதலிக்கிறார். மோகன்னிடம் முகத்தையே காட்டாமல் விளையாட்டு செய்து வரும் அமலா, புதைக்குழியில் சிக்கி இறந்து போய்விடுவார். இந்த முதல் காதலில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மோகனை, அவரது உறவினர் பெண்ணான ராதா காதலிக்கிறார். முதல் காதலில் இருந்து மோகனை மீட்டாரா ராதா??.. ராதாவின் காதலை ஏற்றுக்கொண்டாரா மோகன்?? என்பது தான் இப்படத்தின் கதை. இந்தப்படம் ரிலீஸான சமயத்தில் பெரும் வசூல் சாதனைப் படைத்தது. இன்றளவும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்சத்தில் டிவி முன்னால் அமர்ந்துகொள்ளும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் இந்தப்படம் வெளியான சமயத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை , ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மெல்ல திறந்தது கதவு படம் ரிலீஸ் ஆனபோது மதுரை விநியோகஸ்தர் ஒருவர் முதலில் இரண்டாம் பாதியையும் அதன் பிறகு முதல் பாதியையும் திரையிடுவது நல்லது என்று நினைத்தார். ஆனால் இந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரியாது. அவர்களும் இரண்டாம் பாதியை பிளாஸ்பேக்கை முதலிலும், முதலில் நடக்கும் நிகழ்காலத்தை இடைவேளைக்குப் பின்னரும் பார்த்து ரசித்தனர்.
இந்த மாற்றம் நல்ல வரவேற்பைப் பெற்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்த செய்தி தியேட்டர் வட்டாரங்களில் மிக வேகமாக பரவியது. இதனையடுத்து மற்ற தியேட்டர் ஆபரேட்டர்களும் அதையே செய்ய ஆரம்பித்தனர். ஆகையால் முதல் மற்றும் இரண்டாம் பாதியை மாற்றி மறு தணிக்கைக்கு அனுப்ப ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்தது. சென்சார் குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அங்கிருந்த ஒரு அதிகாரி புதிய தலைப்பு என்ன? மெல்ல திறந்தது கதவா?? அல்லது கதவு திறந்தது மெல்லவா? என்று கேலி செய்யும் விதமாக கேட்டார்” என்று தெரிவித்துள்ளார்.