×

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பிரிவுக்கு மோஹினி டே காரணம் அல்ல :  வழக்கறிஞர் விளக்கம்

 

“இதற்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ரஹ்மான் மற்றும் சாய்ரா, தங்களது விவாகரத்து முடிவை சுயமாக எடுத்தனர். ஆழமாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவு. அது லேசானது அல்ல. இது பரஸ்பர விவாகரத்து ஆகும். அதனால் நிதி பகிர்வு குறித்த எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை” என வழக்கறிஞர் வந்தனா தெரிவித்துள்ளார்.இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கி 1992-ல் வெளியான ‘ரோஜா’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்படும் இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இசை அமைத்து வருகிறார்.


‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஆங்கில படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்தார். இவர், கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள், அமீன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இதுபற்றி சாய்ரா பானு தரப்பில் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரியும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். அவர்கள் உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிபூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதும் இருவருக்கும் இடையே சிரமங்களும் தீர்க்க முடியாத இடைவெளியும் உருவானது. மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சவாலான தருணத்தில் அவரின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

சாய்ரா வழக்கறிஞரின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் 30 வருடத்தை எட்டி விடுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத்தான் இருக்கிறது. உடைந்த மனங்களின் எடையில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக் கூடும். இருந்தாலும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் சேராமல் போனாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த மோஹினி தே அடிப்படையில் ஒரு பேஸ் கிட்டாரிஸ்ட். உலக அளவில் நடைபெற்ற 40-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளில் பேசிசிட் ஆக ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. 2023-ல் தனி ஆல்பத்தை அவர் வெளியிட்டார். இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் மோஹினி என்பது குறிப்பிடத்தக்கது.