ஹிட் அடித்த ‘மோனிகா’.. சாண்டிக்கு முத்தம் கொடுத்த நடிகர் சௌபின்..
'கூலி' படத்தின் 'மோனிகா' பாடல் ஹிட் அடித்ததற்காக, நடன இயக்குநர் சாண்டி மாஸ்டருக்கு , முத்தம் கொடுத்து நடிகர் சோபின் ஷாஹிர் அன்பை வெளிப்படுத்தினார்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’.இந்தப்படத்தில் ரஜினியுடன் அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பஹத் ஃபாசில், ரெபோ மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கூலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், அண்மையில் படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரும்பும் திசைகளில் எல்லாம் ‘மோனிகா.. மை டியர் மோனிகா.. லவ் யூ மோனிகா’ என மோனிகா பாடலே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்தப்பாடலின் வெற்றி குறித்து பகிர்ந்துள்ள நடன இயக்குனர் சாண்டி, “ மோனிகா பாடலை நீங்கள் அனைவரும் கொண்டாடுவதற்கு நன்றி.. சௌபின் ஷாஹிர் சார் மற்றும் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த பாம்பர் ஹிட் பாடலில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி.
சௌபின் ஷாஹிரின் அற்புதமான நடிப்பு பற்றி கேள்விபட்டிருப்போம். இன்று அவரது நடனத் திறமைகளை அறிந்து கொண்டுள்ளோம். பூஜா ஹெக்டே மேடம், மோனிகாவை உருவாக்கியதற்கு நன்றி. நீங்கள் ஒரு அற்புதமான டான்ஸர். உங்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். ” என்றும் படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் 'மோனிகா' பாடல் ஹிட் அடித்ததற்காக, நடன இயக்குநர் சாண்டி மாஸ்டருக்கு , முத்தம் கொடுத்து நடிகர் சௌபின் ஷாஹிர் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். சாண்டி மாஸ்டருக்கு , சௌபின் ஷாஹிர் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.