×

முரசொலி செல்வம் மறைவு; திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி
 

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியருமாக இருந்த முரசொலி செல்வம் (82) மாரடைப்பால் இறந்துள்ளார். கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம், முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். தி.மு.க.வின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். 


முரசொலி செல்வத்துடைய உடல் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரை பிரபலங்கள் சத்யராஜ், சரத்குமார், ராதிகா, தியாகராஜன், பிரசாந்த், பார்த்திபன், விஜயகுமார் , அருண் விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இதில் விஜயகுமார் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “கலைஞர் தன்னுடைய இயக்கத்திற்காக முரசொலி பத்திரிக்கையை ஆரம்பித்தார். அதற்கு பக்கபலமாக இருந்தவர்கள் முரசொலி மாறன் மற்றும் முரசொலி செல்வம். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் கலைஞரின் குடும்பத்தில் ஒருவனாக பழகிக்கொண்டிருந்தேன். முரசொலி செல்வம் இன்னும் சில ஆண்டுகள் இருந்து முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் அறிவுரைகளை சொல்லி ஒத்துழைப்பை கொடுத்திருக்கலாம். பக்கபலமாக இருந்திருக்கலாம். அதற்குள் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது அறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அதே போல் தியாகராஜனும், “பொன்னர் சங்கர் படம் எடுக்கும் போது கலைஞருடன் சில மாதங்கள் பயணித்தேன். அப்போது முரசொலி செல்வம் எனக்கு பழக்கம். நல்ல மனிதர்” என்று கூறினார்.