இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி...!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக இன்று காலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக இன்று (மார்ச் 16) காலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆஞ்சியோ செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த இசை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது, அவரது இசையில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில் மிகவும் பிஸியாக வலம் வரும் இசையமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 7.30 மணி அளவில் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு இருதயத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், பல்வேறு பரிசோதனைகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்து சிகிச்சையும் நிறைவடைந்த பிறகு வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அண்மையில், அவரது மனைவி சாயிரா பானுவுடன் பரஸ்பர விவாகரத்து அறிவித்துப் பிரிந்துள்ளார். இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.