×

"என் தந்தை ஒரு லெஜன்ட்".. ஏ.ஆர்.ரகுமான் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என மகன் கோரிக்கை... !  

 

உலக அளவில் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். தனது தனித்துவமான இசை நாள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஏ.ஆர். ரகுமானின் வாழ்வில் ஒரு சோகம் அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு, ஏ ஆர் ரகுமானுடனான தனது திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானும் தங்களின் விவாகரத்தை உறுதி செய்தார். இந்த தகவல் திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 29 வருடங்களையும் நிறைவு செய்து 30-வது வருடத்தை நெருங்கும் சமயத்தில் ஏ ஆர் ரகுமான் – சாய்ரா பானு இருவரும் இத்தனை வருடங்கள் கழித்து பிரிந்தது ஏன்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஏ ஆர் ரகுமானுக்கும் அவருடன் பணியாற்றிய கிட்டாரிஸ்ட் மோகினி டேவுக்கும் தொடர்பு இருப்பதாக பல தகவல்கள் தீயாய் பரவுகின்றன. இவ்வாறு பல காரணங்களால் ஏ ஆர் ரகுமானுக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டதாக ஒவ்வொருவரும் தனித்தனி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனவே இவ்வாறு ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருவதை கண்டு ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் தனது வேதனையை தெரிவித்திருக்கிறார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை ஒரு லெஜன்ட். இசை துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, பல வருடங்களாக அவர் பெற்ற மதிப்பு, மரியாதை, அன்பு போன்றவை போன்றவற்றிற்காக அவர் ஒரு லெஜெண்டாக பார்க்கப்படுகிறார். அவரைப் பற்றி ஆதாரம் அற்ற பொய்யான தகவல்கள் பரவி வருவதை பார்க்கும் போது என் மனம் உடைகிறது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும் போது உண்மையின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும். அவருடைய கண்ணியத்தை மதிக்க வேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று குறிப்பிட்டுள்ளார்.