×

என் ஹீரோ.. என் ரோல் மாடல்.. தோனியை பார்த்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன் !

 

தனது டி-ஷர்டில் கிரிக்கெட் வீரர் தோனி கையொப்பமிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் கணவரான அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனின் டி-ஷர்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கையொப்பமிடுகிறார். இதனால் அவர் நெகிழ்ந்து போய் அவரின் கைகளில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், என் ஹீரோ, என் கேப்டன், என் ரோல் மாடலுடன் நான். தோனியுடன் இருப்பது எப்போதும் உணர்ச்சிப்பூர்வமானது என்று பதிவிட்டுள்ளார். மேலும் நான் தினமும் நேசிக்கும் ஒருவரை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படம் தயாரிக்க வந்தது மிக்க மகிழ்ச்சி. 

கிரிக்கெட் வீரர் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ‘LGM’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். ஹரி கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக சென்னை வந்துள்ள தோனியை விக்னேஷ் சிவன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.